தேர்தலில் சிங்களவர்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் - எழுத்தாளர் குசால் பெரேரா! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 23, 2024 [GMT]

தேர்தலில் சிங்களவர்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் - எழுத்தாளர் குசால் பெரேரா! Top News
[Thursday 2019-10-03 08:00]

தமிழர்களுடைய அரசியலில் ஒரு குறிப்பிட்ட சாதியே ஏகபோக அதிகாரத்தை செலுத்தி வருவதாக சில சிங்கள ஊடகவியலாளர்கள் எழுதுகிறார்கள். முன்னாள் சன்டே ஒப்சேவர் ஏட்டின் ஆசிரியர் எச் எல் டி மகிந்தபாலா (1990-1994) தமிழ்த் தேசியத்தை கொச்சைப் படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர். தமிழ்ச் சமுதாயம் சாதிச் சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது என ஓயாது ஓழியாது புலம்புவர். எடுத்துக்காட்டாக அவர் Vile Vellala violence stamped on the Tiger flag (Posted on September 24th, 2011) (புலிக் கொடியில் முத்திரையிடப்பட்ட மோசமான வெள்ளாள வன்முறை (செப்டம்பர் 24, 2011 அன்று பதிவிடப்பட்டது)என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருந்தார். மற்ற எல்லா காரணிகளுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை அதன் அனைத்து பரிமாணங்களிலும் வரையறுக்கும் ஒரே ஒரு காரணி மட்டுமே உள்ளது, அது சாதி. சாதி இல்லாத யாழ்ப்பாணம் இல்லை. கடுமையான சாதி அமைப்புக்கு வெளியே ஒரு தீபகற்ப கலாச்சாரமும் இல்லை. யூலியட் இல்லாமல் ரோமியோ இருக்க முடியாதோ அதைப் போல சாதி இல்லாத யாழ்ப்பாணத்தை நினைத்துப் பார்க்க முடியாதது. அல்லது பனம்கொட்டை இல்லாத குடாநாடு. யாழ்ப்பாணத்தின் சாதி கலாச்சாரம் முதன்மையாக மரபுவழி இந்துக்களின் மிகப் பெரிய வழிபாட்டு நபர்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. ”ஆறுமுக பிள்ளை (1822 -1879), பின்னர் ஆறுமுக நாவலர் (சொற்பொழிவாளர்) என்று மாறியது. யாழ்ப்பாண சமுதாயத்தின் படிநிலைகளை மறுசீரமைப்பதன் மூலம் அவர் ஒரு புதிய சாதிக் கட்டமைப்பை உருவாக்கி ஒருங்கிணைத்தார் (Lanka Guardian - July 4, 2011).
  

யத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. தமிழர்களிடம் சாதிச் சிக்கல் இருப்பதாகவும் சிங்களவர்களிடம் அது இல்லை என்றும் சிங்கள தேசியவாதிகள் எழுதி வருகிறார்கள். குறிப்பாக தமிழர்களது உண்மையான வரலாறு தெரியாத மகிந்தபாலா எழுதும் கட்டுரைகளைப் படித்தால் தமிழர்களிடையே பாரிய சாதிப்பாகுபாடு இருப்பதாக நினைப்பர். அது மட்டுமல்ல சிங்களவர்களிடையே எந்தவிதமான சாதிப்பாகுபாடும் இல்லை என்ற முடிவுக்கும் வரக் கூடும்.

சாதிப்பாகுபாடு

தமிழச் சமூகத்தில் மத அடிப்படையில் சாதிப்பாதுகாடு இருப்பது உண்மை. அது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. வருணப் பிரிவு பின்பு தொழில் அடிப்படையில் சாதிப் பிரிவாக உருவெடுத்தது. ஆனால் அண்மைக் காரணமாக சாதிக் கட்டமைப்பு தளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடையே முன்னர் இருந்த இறுக்கம் இப்போது இல்லை. அதற்கு அரசியல், கல்வி, பொருளியல் வளர்ச்சி காரணிகளாகும். தமிழச் சமூகத்தில் மத அடிப்படையில் சாதிப்பாதுகாடு இருப்பது போல சிங்கள சமுதாயத்திலும் சாதிப் பாகுபாடு சகல மட்டத்திலும் சகல தளங்களிலும் வியாபித்திருக்கிறது.

சிங்கள இனம் ஒரு கலப்பினம் ஆகும். இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர், இயக்கர், இராட்சதர், தேவர் போன்ற இனத்தவரே நாளடைவில் சிங்களவர்களாக உருவெடுத்தனர். வேடர் விதிவிலக்கு. அவர்கள் தங்கள் தனித்துவத்தை இன்றும் காப்பாற்றி வருகிறார்கள். குவேனி இயக்கர் குலப் பெண் என்று மகாவம்சம் கூறுகின்றது. இராவணன் இராட்சத குல மன்னன் என கருதப்படுகிறான். இன்றைய சிங்கள இனத்தவர் ஆதி காலத்தில் இந்து நாகர்களாக இருந்து பின்னர் பவுத்த மதத்துக்கு மாறியவர்கள். அனுராதபுரத்தை ஆண்ட தேவநம்பிய தீசன் (கிமு 307 - கிமு 267 BC.) என்ற மன்னனே முதன்முறையாக பவுத்த மதத்தை தழுவியன் ஆவன். விஜயன் முதல் மூத்தசிவன் (தேவநம்பிய தீசனின் தந்தை) வரை இலங்கையை ஆண்டவர்கள் இந்துக்களே.

மனுதர்மம் போன்ற நூல்கள் முற்பிறப்பில் செய்த வினைப் பயனே சாதியில் மேலோனாகவும் கீழோனாகவும் பிறப்பதற்குக் காரணமென்ற சித்தாந்தத்தை கொண்டவை. இலங்கையில் பவுத்தமானது அதன் முற்போக்குத் தன்மையை இழந்து இந்துத்துவ சிந்தனைமுறையைப் பின்பற்றுகிறது. கொவிகம ஆகிய ஆதிக்க சாதிகள் தங்களை உயர் சாதியரெனப் பிரகடனப்படுத்த இந்த சித்தாந்தம் உதவுகிறது. சிங்கள் சமூகத்தில் பல்வேறு வகை சாதிப் பிரிவுகள் காணப்படுகின்றன. அதில் மிக உயர்ந்த சாதியினராக ‘றதல’ எனும் சாதி இருக்கிறது. இச்சாதியினரே அரச வம்சத்தினருக்கு நெருக்கமாக இருந்துவந்துள்ளனர். கண்டி இராச்சியத்தின்போது சிங்கள சமூகத்தில் செல்வாக்கான நிலையில் இருந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க இந்தச் சாதியைச் சேர்ந்தவர்.

இரண்டாம் இடத்தில் ‘கொவிகம’ எனும் சாதிப்பிரிவினர் காணப்படுகிறார்கள். இவர்கள் சிங்கள சமூகத்தில் 50 விழுக்காட்டினர் ஆவர். அரசனுக்கு சேவகம் செய்து வந்தவர்களாகவும் பிற்பாடு அவர்களின் செல்வாக்கின் பயனாக விவசாய ஆதிக்கம் இவர்களிடமே இருந்துவந்துள்ளது. சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்றுவரை இலங்கையின் அரசியல் - பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. விதி விலக்காக சாதி அடுக்கில் மிகவும் பிற்பட்ட இடத்தில் இருந்த இரணசிங்க பிரேமதாச 1988 இல் இலங்கையின் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து ‘கரவா’ (கரையோரப் பகுதிமக்கள்) ‘பத்கம’ (கொய்கம சாதியினருக்க சேவகம் செய்பவர்கள்) ‘வக்கும்புர’ (சக்கரைத்தொழில்) எனும் சாதிப்பிரிவினர் இடைப்பட்ட சமூகத் தட்டில் இருக்கும் சாதியினராகும்.

சிங்களச் சமூகத்தின் விளிம்பு நிலைச்சமூகமாக இருப்பவர்கள் ‘கின்னர’ (காட்டிலுள்ள மூலப்பொருட்களை பயன்படுத்தி பாய்போன்ற கைப்பணிப் பொருட்களை செய்பவர்கள்) ‘கஹல’ (குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவோர்) ‘றொடியா’ (துப்பரவுப்பணி புரிபவர்கள்.) மற்றும் ‘நவன்தன்ன’ (கொல்லர்) ‘கும்பல்’ (குயவர்) ‘படு’ (சலவைத்தொழில்) ‘துறாவ’ (சீவல்தொழில்) ‘சலாகம’ (கறுவாத்தொழில்) ‘பெறவா’ (பறைமேளம் அடிப்பவர்கள்) ஆகியோர் ஆவர். இலங்கையில் சிங்கள (பவுத்த மத) சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்ந்த மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது. மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐஜேடி லெனரோல் குறிப்பிடுகிறார். பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ”இலங்கை மக்கள்” எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.

சிங்கள சாதியமைப்புக்கும் தமிழ் சாதியமைப்புக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டவர்கள். பண்டாரநாயக்கவின் மூதாதையர் கூட, தமிழ்நாடு மற்றும் கேரளம் இரண்டிலும் இருந்து வந்தவர்களே. நாயக்க என்ற பின்னொட்டு பெயர்களைக் கொண்டோர் தமிழ் பின்னணியைக் கொண்டவர்களே. பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தன உட்பட அதிதீவிர சிங்கள - பவுத்தர்கள் தமிழ்ப் பரம்பரையில் வந்தவர்கள். இவர்களே சிங்கள - பவுத்த தேசியவாதத்தை உருவாக்கியவர்களில் முன்னிலை வகித்தார்கள்.

துறாவ வகுப்பினர் கேரளத்து ஈழவர், தமிழ்நாட்டு நாடார் வகுப்பினரோடு ஒத்தவர்கள். இன்றைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர துறாவ வகுப்பைச் சேர்ந்தவர் ஆவர். கரவா, சலாகம, துறாவ சாதியினர் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் இன்றைய கேரள (சேரநாடு) நாடுகளில் இருந்து கொண்டு வந்து தென்னிலங்கையில் குடியேற்றப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பான்மை மீனவ சாதியினர். சிறுபான்மை படையினர். சிங்களவர்களின் மத்தியில் இன்றைக்கும் காணப்படும் ஒவ்வொரு சாதியும் தனக்கென தனியான வரலாற்றைக் கொண்டுள்ளது. சிங்கள சாதிகள் எல்லாமே தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன.

சாதி அடிப்படையில் பவுத்த மத பீடங்கள்

அஸ்கிரியா - மல்வத்தை பவுத்த பீடங்கள் கொவிகம தவிர்ந்த பிற சாதியினரை பவுத்த சங்கத்தில் சேர்ப்பதில்லை. இதனால் கரவா. சலாகம மற்றும் துவார சாதிகளைச் சேர்ந்தவர்கள் மைனமார் சென்று குருப்பட்டம் சூட்டிக் கொண்டார்கள். இவர்கள் அமரபுர என்ற பவுத்த மத பீடத்தை நிறுவினார்கள். இந்த சாதியினர் சிலர் சாதிப் பாகுபாடு காரணமாக கிறித்தவர்களாக மாறினார்கள். கொவிகம சாதிப் பிரிவுக்கு அடுத்ததாக உள்ள கரவா அல்லது மீனவ சாதியினர். இவர்களை தென்னிலங்கை கரையோரப் பகுதிகளில் செறிந்து வாழ்கிறார்கள். மொத்தச் சிங்கள மக்களது தொகையில் 10 விழுக்காட்டினர் இந்த சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நீர்கொழும்பு, புத்தளம், வென்னப்புவ, கொழும்பு வடக்கு, மொறட்ருவா, பாணந்துறை போன்ற நகரங்களில் செறிந்து வாழ்கிறார்கள்.

பவுத்த மதம் சாதி பாராட்டுவதில்லை. புத்தர் தனது காலத்தில் சகல சாதியினரையும் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். பிறப்பு என்பது அவனவன் செய்த தீவினை நல்வினை என்ற இருவினைப் பயனாக தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்ற கருத்தாக்கங்களை புத்தர் நிராகரித்தார். "ஒருவன் தன் பிறப்பால் பிராமணனாகவோ விலக்கப்பட்டவனாகவோ மாறுவதில்லை. அவனது நடத்தையே அவனது குணத்தைத் தீர்மானிக்கின்றமது. நடத்தை மட்டுமே முக்கியம்" என்றார். புத்தரின் கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது. மேலே கூறியவாறு பவுத்த மதத்தின் செல்வாக்குக் காரணமாக சிங்களவர்களிடையே நிலவும் சாதியம் தமிழர்களிடையே நிலவும் சாதியம் போல் இறுக்கமாக இல்லை. தமிழ்ச் சமூகத்தில் இருப்பது போல சிங்கள சமூகத்திடையே சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு இருந்தாலும் தீண்டாமை இல்லை. பவுத்த கோயிலுக்குள் எல்லோரும் அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களிலும் அனைத்து சாதியனரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இருந்தபோதிலும் திருமணம் என்று வரும்போது சாதி பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் இருப்பது போன்று சிங்கள சமூகத்திலும் காணப்படுகிறது.

தேர்தல் காலங்களில் சாதியப்பாகுபாடுகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதையும் வாக்குச்சேகரிப்பு நிகழ்வதையும் காணலாம். முன்னைய காலத்தில் கண்டிச் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களை மணம் செய்து கொள்வதில்லை. ஏன் சிங்களவர் என்றே கரையோரச் சிங்களவர்களைச் சொல்வதில்லை. இன்று கண்டிச் சிங்களவர் கரையோரச் சிங்களவர் என்ற பாகுபாடு இல்லாது போய்விட்டது.

மேலே கூறியவாறு சாதியமைப்பின் ஊற்றுக்கண் வருணாசிரம தர்மமே. வருணாசிரம கோட்பாட்டின்படி பிராமணரே உயர்ந்தவர்கள். அடுத்து சத்திரியர்களும் வைசியர்களும் நான்காவதாக சூத்திரர்களும் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த வருண அமைப்பே பின்னர் அவரவர் செய்யும் தொழில் அடிப்படையில் நூற்றுக் கணக்கான சாதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் அது பிறப்பின் அடிப்படையில் அமைந்துவிட்டது. முன்னைய காலங்களில் வேளாளர் என்போர் பயிர்த் தொழில் செய்தார்கள். இன்று அவர்களில் பெரும்பான்மை வேறு வேறு தொழில் செய்கிறார்கள். இருந்தும் பிறப்பின் அடிப்படையில் வந்த சாதிப் பிரிவு தொடர்கிறது.

மொத்தம் 443 ஆண்டு கால கொலனித்துவ ஆட்சி, பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள், எல்லோரும் கல்வி கற்கும் வாய்ப்பு, போக்குவரத்து போன்ற காரணிகளால் சாதிக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில சாதிகள் வழக்கொழிந்து போயின. சில சாதிகள் புதிதாகப் புகுந்து கொண்டன. தகப்பன் செய்த தொழிலை மகன் செய்ய வேண்டும் என்ற நியதி பேரளவு குறைந்துவிட்டது. எம்எல்டி மகிந்தபால போன்ற தீவிர - சிங்கள பவுத்த தேசியவாதிகள் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. சாதி பாகுபாட்டில் தமிழ் - சிங்கள சமூகங்கள் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. தேர்தலில் சிங்களவர்கள் சாதி அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்ற உண்மையை கொழும்பைத் தளமாகக் கொண்ட குசல் பெரேரா என்ற எழுத்தாளர் அம்பலப்படுத்தியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகளின் தமிழாக்கத்தைப் இப்போது பார்க்கலாம்.

தேர்தலில் சாதி ஒரு காரணியாகும்.. ஆனால் பெரும்பாலானவர்கள் அதைப்பற்றிப் பேச விரும்புவதில்லை. சனாதிபதி தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல் வரை அரசியல் கட்சி மற்றும் சாதித் தேர்வுகள் உள்ளன. சில நியமனங்கள் கிட்டத்தட்ட கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அவற்றை அரசியல் கட்சிகள் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. முந்தைய ‘கம்பத்தை முதல் கடந்த’ விதிக்கமைய, மாத்தற தேர்தல் மாவட்டம் துராவ சாதியினரின் ஆதிக்கத்தில் இருக்கிறது. ஒரே தடவை மட்டும் அந்தத் தேர்தல் மாவட்டத்தை மார்ச் 1960 இல் நடந்த தேர்தலில் 1,876 வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் இழந்தார்கள். கரவா சாதியின் கோட்டையாக தெவினுவர இருந்தது. அம்பலாங்கொடையில் கரவா ஆதிக்கம் செலுத்தியது. பலப்பிட்டி சலாகம சாதி ஆதிக்கம் செலுத்தியது. இரத்னபுரியில் உள்ள கொலொன்ன வஹம்புர சாதியினரின் இருக்கை. கேகாலை மாவட்டத்தில் இரம்புக்கனாவும் கண்டி மாவட்டத்தில் உள்ள குண்டசால பத்கம சாதியின் கோட்டைகளாக இருந்தன. இந்தச் சாதி விருப்பங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்லாமல், சமசமாஜ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒத்துப் போகின்றன. இந்தத் தேர்தல்களில் ‘சுயாதீன’ வேட்பாளர்ளர் கூட சாதி வாக்கு வங்கியை நம்பிப் போட்டியிட்டார்கள்.

1982 ஒக்தோபரில் நடைபெற்ற முதல் சனாதிபதித் தேர்தலில் இது ஒரு தீவிர காரணியாக கருதப்படவில்லை, அது ஜெயவர்த்தன Vs கோபெக்கடுவாவுக்கு எதிரான போட்டியாக இருந்தது. இரணசிங்க பிரேமதாச 1988 செப்தெம்பரில் ஐதேக யின் சனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த முடிவு கிராமப்புற சமூகத்தின் கீழ்நிலை சாதிகளின் ஒப்புதல் பெற்றது. மிகவும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட கிராமங்களில், இரணசிங்க பிரேமதாச ஐதேக யின் சனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதைக் கொண்டாட பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. சனாதிபதித் தேர்தலில் முதன் முறையாக தங்களை ஒருவர் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதாக அவர்கள் உணர்ந்தார்கள். அரசியல் ரீதியாக, இது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஜெயவர்த்தன அமைச்சரவையில் வீட்டுவசதி, கட்டுமான மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரேமதாசா இருந்தார்ஃ அதன் காரணமாக ஏராளமான வீட்டுத் திட்டங்கள் சமூக ரீதியாக ஓரங்கட்டப்பட்ட ஏழை சமூகங்களை மையமாகக் கொண்டிருந்தன. தனது மிகவும் பிரபலமான ‘உதா காம்’ திட்டத்தைத் தொடங்க, அவர் மகாவாவில் ஒரு பின்தங்கிய கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். மாதிரிக் கிராமங்களாக வடிவமைக்கப்பட்ட அந்தத் திட்டம் சிங்கள தெற்கில் உள்ள ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட சாதி சமூகங்களைச் சென்றடைந்தது. தேசிய வீடமைப்பு அமைச்சர் என்ற முறையில் வீட்டுத் திட்டங்களை உருவாக்கி அவற்றை பிரதமர் என்ற முறையில் வைபவ ரீதியாக திறந்து வைப்பதன் மூலம் தன்னை ஏழை எழிய சமூகங்களின் மத்தியில் செல்வாக்குடைய தலைவர் என்ற பிம்பத்தை பிரேமதாச நிறுவிக் கொண்டார்.

1988 டிசம்பரில் நடந்த சனாதிபதித் தேர்தலில் ஜேவிபி யின் கொடூரமான எதிர்ப்பு இருந்த போதிலும் - வாக்காளர்களது ஆதரவு 55 விழுக்காடு குறைந்து போய்விட்டது - பிரேமதாச பெற்ற வெற்றியில் ஓரங்கட்டப்பட்ட சாதி சமூகங்களின் தீர்க்கமான பங்களிப்பைக் கொண்டிருந்தது. சரி. நொவெம்பர் 16 இல் நடைபெற இருக்கும் சனாதிபதி தேர்தலில் குசால் பெரேரா, கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச இருவரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதையிட்டு அவர் எழுதியிருப்பதையும் பார்ப்போம். இராசபக்ச வெளியேற்றப்பட்ட பின்னர், இன - மத அமைதிக்கு வாக்களித்த முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மிருகத்தனமாக சிதைக்கப்பட்டு விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ஐதேக இன் தலைமையுடன் என்ன சமரசம் செய்தாலும் சிறுபான்மையினர் தேர்தலில் வாக்களிக்க அதிக காரணம் இருக்காது.

நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புற மக்களது வாழ்க்கையிலும் வெறுப்பு உணர்வு உள்ளது. 2015 ஆம் ஆண்டில் 'யகாப்பாலனய’ மாற்றத்திற்காக குரல் கொடுக்கும் பிரச்சாரகர்களாக இருந்த கொழும்பு சிவில் சமூகத் தலைவர்கள் ஊமையாகிவிட்டனர். அதே நேரத்தில் ‘குடிமகன்’ பிரதிநிதிகளாக பரப்புரைக்கு வந்த சிலர் ஜேவிபி பக்கம் போய்விட்டனர். நொவெம்பர் 16 இல் நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் கோத்தபாயவுக்கும் சஜீத்துக்கும் இடையில் சிங்கள வாக்காளர்கள் எவ்வாறு துருவமுனைப் படுவார்கள் என்று ஊகிப்பது நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும். சனவரி 2015 சனாதிபதித் தேர்தலில், 81.5 விழுக்காடு வாக்காளர் வாக்களித்தனர். இது 12.3 மில்லியனாக இருந்தது. தெற்கில் இருந்து வரும் அனைத்து சிங்கள தலைவர்கள் மீதும் வடக்கு மற்றும் கிழக்கில் இப்போது பரவலான வெறுப்பு, விரக்தி மற்றும் கோபம் உள்ளது. இராசபக்சாவுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக வாக்களித்த போதிலும் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான ‘யகாப்பாலனய’ அரசாங்கம் தங்களை முற்றிலும் ஏமாற்றி விட்டதாக என அவர்கள் உணர்கிறார்கள். இராசபக்ச வெளியேற்றப்பட்ட பின்னர் போருக்குப் பிந்தைய சிக்கல்களைத் தீர்ப்பதில் ஓரளவு கண்ணியத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள். இன - மத அமைதிக்கு வாக்களித்த முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மிருகத்தனமாக சிதைக்கப் பட்டு விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ஐதேக தலைமையுடன் என்ன சமரசம் செய்தாலும், சிறுபான்மையினர் தேர்தலில் பங்குபற்ற போதிய காரணம் இல்லை.

சிங்கள வாக்காளர்கள்

எனவே, இந்த நொவெம்பரில் வாக்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படும். இந்த முறை இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உட்பட 15.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், வடகிழக்கு வாக்காளர்களில் கணிசமான விழுக்காடு வாக்களிக்கத் தூண்டப்பட மாட்டார்கள். நாட்டின் பிற பகுதிகளில், முஸ்லீம் சமூகம் 2015 சனவரியில் செய்ததைப் போல வாக்குச் சாவடிகளைத் தேடி ஓடமாட்டார்கள். மேலும், நகர்ப்புற வாக்குகள் குறைக்கப்பட்டால், வாக்களிக்கும் விழுக்காடு 75 கும் குறைவாகவே இருக்கும். அது 11.6 மில்லியன் வாக்குகளாக இருக்கும். அவர்களில், 74 விழுக்காடு, அதாவது 8.6 மில்லியன், சிங்கள வாக்காளர்களாக இருப்பார்கள். அவர்களில் 70 விழுக்காடு - 6.02 மில்லியன் பேர் - சிங்கள பவுத்தர்களாக இருப்பார்கள். இந்த சிங்கள பவுத்தர்களது வாக்குகள் இரு பிரதான வேட்பாளர்களிடையேயும், குறைந்த அளவிற்கு ஜேவிபியின் அனுர குமாராவாவுக்கும் பகிரப்படும். எஞ்சிய 2.58 மில்லியன் சிங்கள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வாக்குகளில் பெரும்பான்மையானது ஐதேக வேட்பாளரை நோக்கி செல்லக்கூடும். தேர்தலில் வெற்றிபெற, மொத்தமாக வாக்களிக்கப்பட்ட 11.6 மில்லியனில் 5.8 மில்லியன் ‘பிளஸ்’ வாக்களிக்க வேண்டும். எந்த ஒரு வேட்பாளரும் 6.02 மில்லியன் சிங்கள பவுத்த வாக்குகளில் இருந்து 5.8 மில்லியனைப் பெறமுடியாது.மேலும் 2.58 மில்லியன் பவுத்தர்கள் அல்லாத சிங்கள வாக்குகளை கூட முழுமையாகப் பெறுவது சாத்தியமற்றது.

மொத்த 6.02 மில்லியன் சிங்கள பவுத்த வாக்குகளில் தோராயமாக 10 விழுக்காடு அனுர குமராவிற்கும் 01 விழுக்காடு கட்டாக்காலி வேட்பாளர்களுக்கும் மீதமுள்ள 5 மில்லியன் சஜீத்துக்கும் போகக் கூடும். இதில் பெரும்பான்மையானவர்கள் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களில் சேர்ந்தவர்களாக இருப்பர். இதனால் கோத்தபாய ஒரு கடுமையான இக்கட்டு நிலைக்கு உள்ளாக்கப்படுவார். இருப்பினும் சஜீத், வடகிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகள் 5.8 மில்லியன் + ஆக எட்டுவது மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். மொத்தம் 6.02 மில்லியன் சிங்கள பவுத்த வாக்குகளில் பெரும் பங்கை கோத்தபாய திரட்ட முடியும் என்று ஒப்புக் கொண்டாலும் கூட., கோத்தபாயவைப் பொறுத்தவரை அது இன்னும் கடினம் ஆக இருக்கும்.

மீண்டும் நொவெம்பர் 2005 மற்றும் சனவரி 2015 இல் நடந்தது போலவே சிறுபான்மை வாக்குகள் சிங்கள பவுத்த சனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் என்று தோன்றுகிறது. அப்படியானால் என்ன மாற்றம்? (http://www.dailymirror.lk/opinion/Minorities-may-decide-Sinhala-Buddhist-president-with-no-return/172-175215) குசால் பெரேரா என்ன சொல்ல வருகிறார் என்றால் சஜீத் பிரேமதாசாவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களில் பெரும்பான்மையினர் ஓரங்கட்டப்பட்ட சாதியினர் ஆக இருப்பர்!

  
   Bookmark and Share Seithy.com


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
[Saturday 2022-01-29 18:00]

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.


‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்!
[Tuesday 2021-11-23 13:00]

கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காகப் போராடிவரும் சக்திகளுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


யாழ்-உதயன் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் வெளிவந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி.
[Wednesday 2021-09-22 18:00]

"ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றத்தை தந்துள்ளது." எம்மைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் போர்குற்றம் புரியவில்லை என்பதனை நிருபிக்க நாங்கள் தயாராக இருப்பதோடு, சிறிலங்கா இனப்படுகொலையினை புரிந்த அரசு என்பதனையும் நிருபிக்க தயாராகவுள்ளோம்.”— பிரதமர் வி.உருத்திரகுமாரன்JAFFNA,


இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு: -சிறிமதன்
[Thursday 2021-03-18 19:00]

தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான்.


இன அழிப்பின் உயிர்வாழும் ஆதாரங்கள்
[Monday 2020-10-19 21:00]

வைத்தியர் சி. யமுனானந்தா

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக்காலம் முழுவதும் அந்நியரால்அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமானமோ மாறாது இயற்கை உற்பவம் காத்து வந்தது. அவ்வாறே 2009இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளத் தலைப்பட்டனர்.


முத்தையா முரளிதரனை நாம் அவரது வர்க்க குணாம்சத்தை வைத்தே அளவிட வேண்டும்:
[Sunday 2020-10-18 14:00]

முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்படுவது தொடர்பாகவும் அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பின்னர் சில குறிப்புகளை எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா