Untitled Document
May 7, 2025 [GMT]
தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவோம்! - சங்கு கூட்டணி அழைப்பு.
[Saturday 2025-04-26 17:00]

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

  

ஈழத் தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு காணப்படும்வரை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அவசிய, அவசரத் தேவையாகும்.

இதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதனை சட்டரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் உறுதியானதொரு கட்டமைப்பாக உருவாக்குவதன் மூலமே கூட்டமைப்பிற்குள் ஜனநாயக நடைமுறைகளைப் பேண முடியும். அங்கத்துவக் கட்சிகள் தோழமையுடன் செயற்படவும் முடியும். தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் யுத்த வெற்றிவாதத்தை முன்வைத்து ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயற்படுத்திவரும் பல்வேறுவகை ஆக்கிரமிப்புகள், கலாசார படுகொலைகள் ஆகியவற்றை வினைத்திறனுடன் கையாள்வதற்கு ஏற்ற வல்லுனர் குழுக்களை அமைத்து தீர்வை நோக்கி முன்னேறவும் முடியும்.

ஆனால் இன்றைய தமிழரசுக் கட்சியோ இத்தகைய சிந்தனைகளுக்கு வெகுதூரத்தில் உள்ளது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் தனிவழி செல்வதையே நீண்டகாலமாக தனது கொள்கையாகக் கொண்டிருந்தபோதிலும் உள்ளூராட்சித் தேர்தலையொட்டி சில தனிநபர்களையும் குழுக்களையும் இணைத்து ஒரு கூட்டணியாக செயற்படுவதாகக் காண்பிக்க முற்படுகிறது.

கூட்டமைப்பிலிருந்து தனிவழி சென்ற தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஜனநாயக போராளிகள் ஆகிய அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஒரு வலுவான கட்டமைப்பாக கடந்த பல வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றோம். அத்துடன் இம்முறை உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து சமத்துவக் கட்சியும் இணைந்து எமக்கான ஓர் யாப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து எமக்கான சின்னத்தையும் பெற்று, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தப்படுத்தி செயற்பட்டு வருகின்றோம்.

தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட, நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு ஜனநாயகபூர்வமான ஐக்கிய முன்னணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியே இயங்கி வருகிறது. இதனை வலுப்படுத்த வேண்டியது மக்களின் கடமையும் பொறுப்புமாகும் என்று வேண்டிக்கொள்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடனும் இணைந்து தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நீங்கள் அளிக்கும் ஆதரவும் ஆணையுமே இந்த முயற்சியை மேலும் முன்கொண்டு செல்ல துணைபுரியும்.

தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலை

வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கு அதிகாரப் பகிர்வு கோரி தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட ஆட்சிக்கு வந்த பேரினவாதச் சிந்தனை கொண்ட சிங்கள கட்சிகளோ முப்படைகள், காவல்துறை, புத்தபிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்களம், வனவளத்துறை, மகாவலி அபிவிருத்திசபை ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின்கீழ் கொண்டுவரும் பெரும்திட்டம் ஒன்றை செயற்படுத்தி வருகின்றன.

இவற்றிற்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் மீதும் தமிழ்க் கட்சிகள் மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றது. இவற்றிற்கு எதிராக, நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் இலங்கை அரசாங்கத்தின் இனவாத, மதவாத நடவடிக்கைகளை வெளிப்படுத்தி, ஊடகங்களின் ஊடாகவும் இராஜதந்திர சமூகத்தினுடனான சந்திப்புகளூடாகவும் அனைத்து விடயங்களும்வெளிக்கொணரப்பட்டன. ஆனால், அனைத்து இந்நடவடிக்கைகள் சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கலாசார படுகொலை நிகழ்ச்சித் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல் எதனையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஓரளவேனும் முடிவுகட்டி எமது மண்ணையும் மக்களையும் காக்க வேண்டுமாயின், அதற்கு முதற்படியாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றி மாகாணசபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இந்தியாவின் தலையீட்டைக் கோரியது. கடந்த ஏழு வருடங்களாக மாகாணசபைத் தேர்தல்களை பிற்போட்டு மாகாணசபை அதிகாரங்களை நாடாளுமன்றம் மூலம் கையாள்வதனூடாக காணிகளை அபகரித்தல், சிங்கள குடியேற்றங்களை நிறுவுதல், பௌத்தமக்கள் வாழாத இடங்களில் புதிதாக புத்த கோயில்கள் என அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு இன்றும் தொடர்கின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் உட்பட இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் சில அழுத்தங்களை இலங்கை அரசின்மீது ஏற்படுத்தினாலும்கூட அது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெறுகின்றது. அதேவேளை தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியைப் பேணும் பணியின் பெரும்பங்கை இந்தியாவின் பொறுப்பிலேயே உலக நாடுகள் விட்டுள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். எனவே இப்பிராந்தியத்தில் அமைதிக்கும் சமாதானத்திற்குமான இந்தியாவின் பங்களிப்பு என்பது சர்வதேசத்தினால் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அவற்றையும் கருத்திலெடுத்து செயற்படுவது தமிழ்த் தலைமைகளினால் தவிர்க்க முடியாததொன்றாகும்.

தமிழர் தரப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்த கருத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடும் இல்லாமையின் காரணமாக தங்களால் எதுவும் செய்ய முடியாதிருப்பதாக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் தொடர்ந்து கூறிவருகின்றது. ஆகவே தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஏற்படும் ஐக்கியம் என்பதே சிங்கள ஆக்கிரமிப்புகளிலிருந்து தமிழ்ப் பிரதேசத்தைப் பாதுகாக்க ஓரளவிற்காவது உதவியாக இருக்கும் என்பதையும் நாங்கள் இந்த அறிக்கையினூடாக வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

தீர்வு முயற்சிகள் தடைப்பட்டு, தமிழ்க் கட்சிகள் மத்தியில் முரண்பாடுகள் தொடர்ந்து, ஐக்கியமின்மை ஏற்பட்டதன் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான சக்தியான தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவிலான ஆதரவினை கொடுத்தார்கள். இதன் விளைவாக ஆக்கிரமிப்பு நோக்கமுள்ளதும் கலாசார படுகொலை நிகழ்ச்சி நிரலைக் கொண்டதுமான தமது கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்றும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் தாயகக் கோட்பாட்டை தமிழ் மக்கள் கைவிட்டுள்ளனர் என்றும் ஆளும் கட்சியினர் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதுமாத்திரமல்லாமல் இவர்கள் சந்திக்கும் சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் வடக்கு- கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் தமக்கு பெருமளவு ஆதரவை வழங்கியிருப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் ஒதுங்கி நின்றால் தாமே பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதாகவும் கதையளக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த அபாயத்திலிருந்து விரைந்து மீண்டெழக்கூடிய தேவை தமிழ் மக்களுக்குள்ளது. இதற்கான முழு முயற்சிகளையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முன்னெடுக்கும் என்பதையும் இந்த விஞ்ஞாபனத்தின் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

கடந்த ஏழு வருடங்களாக மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டே வருகின்றது. வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் எமது நீண்ட போராட்டத்தில் கிடைத்த, ஒரு தீர்வு என்பதற்கு அண்மித்த ஒரு முயற்சியாக இந்த மாகாணசபை முறைமை இப்பொழுது அமைந்திருக்கின்றது. ஆனால் சிங்கள அரசுகள் அனைத்தும் இந்த மாகாணசபை முறைமையை எதிர்த்தே வந்திருக்கின்றன. மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளன. மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தாமல் தமது முகவர்களான ஆளுனர்களை நியமித்து தாம் விரும்பியவாறான நிர்வாகத்தை நடாத்தி வருகின்றனர். இதனூடாக சிங்களக் குடியேற்றங்கள், பலாத்காரமாக காணிகளைப் பறிமுதல் செய்தல், நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்புகளில் சிங்களவர்களுக்கே முக்கியத்துவம் போன்ற பல விடயங்களைச் செய்து வருகின்றனர்.

தற்போதைய அநுர அரசும்கூட நாங்கள் தேர்தலை நடாத்துவோம் என்று கூறுகின்ற போதிலும் அதனை நடாத்துவதற்கு விருப்பமற்றவர்களாகவே இருக்கின்றது. இதனால் குறைந்தபட்சமாக எங்களுக்குக் கிடைத்த அதிகார பரவலாக்கம்கூட எமது கைகளைவிட்டு நழுவும் நிலையிலேயே தமிழ்ச் சமூகம் இருக்கின்றது. எனவே எமக்குக் கிடைத்த அதிகாரப் பரவலாக்கலை முழுமையாகக் கைவசப்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்தினால் தமிழ்க் கட்சிகள் வெற்றியடையும் என்பதும் மாகாண சபைகள் தமிழர் வசம் செல்லும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.

அப்படி நடந்தால் தமது கட்டமைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதாலும் சிங்கள கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு அதிகாரங்கள் அவர்களிடம் இருக்காது என்ற அச்சத்தாலும் இத்தேர்தல்களை நடாத்தக்கூடாது என்பதில் சகல ஆளும் சிங்களத் தரப்புகளும் ஒரே கொள்கையைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்தப் பின்னணியிலேயே நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இது வெறுமனே உள்ளூராட்சிசபைத் தேர்தல்தானே, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்கக்கூடியவர்களை தேர்வு செய்வதுதானே என நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் இத்தேர்தலின் முடிவுகள் எமது தாயகத்தின் மீதான ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக்கூடியதாக அமைய வேண்டும். அத்துடன் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகளுக்கிடையில் ஐக்கியம் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கான கதவுகளைத் திறப்பதாக அமைய வேண்டும். இனமோதல் தீர்வுகள் தொடர்பில் பேசவல்ல இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் நிலைப்பாடுகளில் காத்திரமான செல்வாக்கைச் செலுத்துவதாக அமைய வேண்டும்.

எனவே இந்தத் தேர்தலின் முடிவுகளினூடாக, சிங்கள மேலாதிக்க ஆக்கிரமிப்பாளர்களான ஜேவிபி உள்ளிட்ட எந்த சிங்கள கட்சிகளையும் தமிழர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்ற செய்தி மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரே குரலில் செயற்படுவதற்கு

ஊக்கமளிப்பதாக அமைய வேண்டும். எனவே தமிழ் தேசிய உணர்வுடன், ஊழலற்ற, வினைத்திறன் மிக்க உள்ளூராட்சி நிர்வாகங்களைக் கட்டியெழுப்பவல்ல சமூக சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்களைக் கொண்ட, சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என்றும் நாம் வேண்டுகின்றோம்.

நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி என்ற மாயமானை ஆதரித்ததன் மூலம் தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும்.

எனவே வாக்காளர்கள் தனிப்பட்ட குறுகிய விருப்பு வெறுப்புகளைக் கடந்து நிலைபேறான உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் வகையில் தமிழ்த் தேசியத்தின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டுகின்றோம்.

கடந்கால ஆட்சியாளர்களைப் போலவே வெற்று வாக்குறுதிகளை வழங்குதல், தேர்தல் அண்மிக்கும்போது ஒரு வீதியையோ சிறு காணித்துண்டையோ விடுவித்தல் அதன் மூலம் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளல் என்பதையே அநுரகுமார ஆட்சியும் செய்து வருகின்றது. பல தசாப்தங்களாகப் பார்த்து வந்த இந்த ஏமாற்று நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் பலிகடா ஆகமாட்டார்கள் என்பதை ஆணித்தரமாகக் கூறுவதாக எமது மக்களின் முடிவுகள் அமைய வேண்டும்.

இந்தத் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம், மேற்கண்ட அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுப்பதுடன் பிரதேச சபைகளின் வழமையான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக ஊழலற்ற வினைத்திறன் மிக்க உள்ளூராட்சி நிர்வாகங்களை கட்டியெழுப்புவோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

உள்ளூராட்சி சபைகளின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளுக்கான நிதியீட்டங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு சபையும் தங்களது சொந்தக்கால்களில் நிற்கக்கூடிய அளவிற்கு தேவையான வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படுத்துவோம்.

வெள்ள வடிகாலமைப்புத் திட்டங்கள், கால்நடைகளுக்கான நீர்நிலைகள் என்பவை நீடித்து நிலைத்திருக்கும் வகையில் புனருத்தாரணம் செய்யப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சபைகள் தமக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்தி, அகற்றப்படும் கழிவுகளை மீள்சுழற்சிக்கு போன்ற உட்படுத்துவது, இயற்கை உரம் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான காத்திரமான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

பொது மக்களுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் இடையூறின்றி, வீதிவிபத்துக்களுக்குப் பெருமளவு காரணமாக இருக்கும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மின்னொளி இல்லாத வீதிகளுக்கு மின்னொளி வழங்குவதுடன் விளையாட்டு மற்றும் வாசிப்புத் துறையும் ஊக்குவிக்கப்படும்.

ஒவ்வோர் உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் பெற வசதியாக, அச்சபை எல்லைகளுக்குட்பட்ட தச்சு வேலைத்தளங்கள், கம்மாலை வேலைத்தளங்கள், ஒட்டுவேலைத்தளங்கள், கட்டுமான அமைப்புகள், மின் மற்றும் தண்ணீர் குழாய்கள் பொருத்துநர்கள் என அனைத்து தொழில் நிலையங்களும் தொழில் முனைவோரும் பதிவு செய்யப்பட்டு அப்பிரதேச மக்களுக்கான சரியான தகவல்களை வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்வோம்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொதுச்சொத்துகள் பாதுகாக்கப்படும்.

பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகளால் எமது நிரந்தர வியாபாரிகளுக்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுத்து நிறுத்தி அவர்களின் வணிகத்தைத் தொய்வின்றி முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொது அமைப்புகள், நன்கொடையாளர்களின் உதவியுடன் சகாய வேலைத்திட்டங்களினூடாக சுத்தம், சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்புகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுத் திட்டங்கள் தொடர்ந்து செயற்படுத்தப்படும்.

மக்கள் விரும்பி வாழ்வதற்கேற்ற இடமாக அனைத்துப் பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுதியுடன் செயற்படும்.

  
   Bookmark and Share Seithy.com



கூட்டமைப்பாக பெற்றதை விட பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்!
[Wednesday 2025-05-07 17:00]

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



257 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!
[Wednesday 2025-05-07 17:00]

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைவாக, 257 உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.



பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்!
[Wednesday 2025-05-07 17:00]

நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவாது என்று ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் சுயாதீன குழுக்களின் ஆதரவை பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.



நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கிறார்கள்!
[Wednesday 2025-05-07 17:00]

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



வடக்கு கட்சிகள் என்பிபியை ஆட்சியமைக்க அழைக்கின்றவாம்!
[Wednesday 2025-05-07 17:00]

வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைக்க, தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் தமிழரசு 12, சைக்கிள் 3, சபைகளில் வெற்றி!
[Wednesday 2025-05-07 17:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.



எழுவைதீவில் 323 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
[Wednesday 2025-05-07 17:00]

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவினை கடத்தி வந்த மூவரை கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியையும், மற்றைய இருவர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்போம்!
[Wednesday 2025-05-07 17:00]

கொழும்பு மாநகர சபையில் புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும், அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.



அமைச்சர் ஆனந்த விஜேபாலவை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு தள்ளுபடி!
[Wednesday 2025-05-07 17:00]

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



மீண்டும் கைது செய்யப்பட்டார் ரம்புக்வெல்ல!
[Wednesday 2025-05-07 17:00]

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று ஆணைக்குழுவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கட்சிகள் ஆதிக்கம்- பிற பகுதிகளில் என்பிபி வெற்றி!
[Wednesday 2025-05-07 06:00]

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று அதிகாலை 5 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. தமிழர் பகுதிகளில் தமிழரசு, தமிழ்,காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.



யாழ். மாநகரசபையைக் கைப்பற்றிய தமிழரசு- தமிழ் காங்கிரசும் பலம் காட்டியது!
[Wednesday 2025-05-07 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.



கிளிநொச்சியின் 3 சபைகளும் தமிழரசின் வசமானது!
[Wednesday 2025-05-07 06:00]

உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 உள்ளூராட்சி சபைகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இவற்றில் இரண்டு சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுள்ளது.



வலி.தென்மேற்கில் தமிழரசு வெற்றி!
[Wednesday 2025-05-07 06:00]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு-



சாவகச்சேரி நகரசபையை கைப்பற்றியது தமிழ் காங்கிரஸ்!
[Wednesday 2025-05-07 06:00]

யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.



மன்னார் மாவட்டம் என்பிபி வசம்!
[Wednesday 2025-05-07 06:00]

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், முசலி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மாந்தை மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.



வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ் காங்கிரஸ் கைப்பற்றியது!
[Wednesday 2025-05-07 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இல் யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. வல்வெட்டித்துறை நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.



வெருகலில் வாகை சூடிய தமிழரசு!
[Wednesday 2025-05-07 06:00]

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.



புதுக்குடியிருப்பிலும் தமிழரசு தனியாட்சி!
[Wednesday 2025-05-07 06:00]

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.



திருகோணமலை மாநகரம் தமிழரசின் வசம்!
[Wednesday 2025-05-07 06:00]

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா